மக்களவை தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவிகிதம் குறையவில்லை என்றும், மாறாக, அதிமுகவின் வாக்குகள் 1 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகவும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த இபிஎஸ், செய்தியாளர்களை சந்தித்தார். பாஜக கூட்டணியின் வாக்குகள் 2014 தேர்தலில் பெற்றதைவிட, நடப்பு மக்களவை தேர்தலில் குறைவு என்றும் இபிஎஸ் கூறினார்.
1991 சட்டப்பேரவை தேர்தலில் திமுக 2 இடங்களை மட்டுமே பெற்றதாகவும், 1996ஆம் ஆண்டு அதிமுக 4 இடங்களை மட்டுமே பெற்றதாகவும் கூறிய இபிஎஸ், அதற்காக, அதிமுகவும், திமுகவும் என்ன அழிந்துவிட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
அதிமுகவால் அடையாளம் காட்டப்பட்டு திமுகவில் அமைச்சர் பதவி பெற்றவர்கள் குழப்பம் ஏற்படுத்துவதாக அமைச்சர் ரகுபதியை விமர்சித்தார்.
தமக்கும் எஸ்.பி.வேலுமணிக்கும் பிரச்சனை இருப்பதாக கூறி அதிமுகவில் அண்ணாமலை குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் மாற்றமில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.