அண்ணே, இந்த அழகுமணி அவங்கள அவங்களே திருமணம் செஞ்சுக்க போறாங்களாம்..! ஹனிமூன் கோவாவுலயாம்..!
Published : Jun 03, 2022 6:28 AM
அண்ணே, இந்த அழகுமணி அவங்கள அவங்களே திருமணம் செஞ்சுக்க போறாங்களாம்..! ஹனிமூன் கோவாவுலயாம்..!
Jun 03, 2022 6:28 AM
இந்தியாவில் முதல்முறையாக தன்னை தானே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ள இளம் பெண் ஒருவர், அதற்காக அழைப்பிதழ் அச்சிட்டு இருப்பதோடு, ஹனிமூனுக்காக கோவாவுக்கு செல்ல இருப்பதாக கூறி இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம் பெண்ணான ஷாமா பிந்து என்பவர் தான் தன்னை தானே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ள அழகுமணி..!
காதலிக்க ஆள் கிடைக்காமலோ... காதலில் தோல்வி அடைந்ததாலோ.. திருமணத்திற்கு வரன்கிடைக்காமலேயோ.. இப்படி ஒரு முடிவை எடுக்க வில்லை ஷாமா பிந்து...! எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்றுள்ள இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி கை நிறைய சம்பளம் பெற்று வரும் நிலையில் வருகிற 11ஆம் தேதி வினோதமான முறையில் நடக்க இருக்கின்ற தன்னுடன் தனக்கு நடக்க இருக்கிற திருமணத்துக்கு தயாராகி வருகிறார்.
வழக்கமான திருமணம் போல ஆடை , ஆபரணம் மற்றும் அனைத்து சம்பிராதாயங்களும் இவருடைய திருமணத்தில் கடைபிடிக்கப்பட உள்ளன. இந்த திருமண நிகழ்வுக்கு என்று பிரத்யேகமாக அழைப்பிதழ்களை அச்சடித்துள்ள இவர், தனது திருமணத்தில் பங்கேற்க சில உறவினர்களை மட்டும் அழைத்துள்ளார். இந்த திருமணத்தில் மணமகன் மட்டுமே இல்லையே தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
இந்தியாவில் பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு முதல்முறையாக குஜராத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஷாமா பிந்து , சிறு வயதில் இருந்தே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைத்ததாக கூறியுள்ளார். திருமணம் எனும் பாரம்பரியம் தம்மை பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும்,ஒரு மணமகளாக வேண்டும் என விரும்பியதாகவும், அதனால், தன்னை தானே மணந்துகொள்ள முடிவு செய்ததாகவும் கூறி உள்ளார்.
இதுபோன்று இந்தியப் பெண்கள் யாராவது திருமணம் செய்திருக்கிறார்களா என்று ஆன்லைனில் தேடிப் பார்த்ததாகவும், ஆனால், யாரும் அப்படி செய்துகொள்ளவில்லை. திருமணத்தைப் புனிதமாகக் கருதும் இந்திய நாட்டில் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் முதல் பெண் தாம் தான் என்றும் ஷாமா பிந்து தெரிவித்துள்ளார்.
பெண்கள் தாங்கள் விரும்புபவரை திருமணம் செய்து கொள்வார்கள்.அதே போல இந்த திருமணம் மூலம் தன்னை தானே காதலிக்கப் போவதாக அவர் கூறியுள்ளார். இந்தத் திருமணத்தை பெற்றோர் ஏற்றுக் கொண்டார்கள் என்றும்,அவர்களுக்கும் இதில் மகிழ்ச்சிதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மெஹந்தி நிகழ்ச்சி ஜூன் 9ஆம் தேதியும், திருமணம் ஜூன் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கும் நடைபெறவுள்ளது என்றார் ஷாமா பிந்து
திருமணம் முடிந்த பின்னர் இரண்டு வாரம் ஷாமா ஹனிமூனுக்கு கோவாவுக்கும் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. இது போல தன்னை தானே மணம் முடிக்கும் நிகழ்வுகள் வெளிநாடுகளில் அரங்கேறி உள்ள நிலையில், இப்போது ஷாமா பிந்து மூலம் இந்தியாவிலும் நிகழ உள்ளது.