அசாமில் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்ததால் ஆயிரம் கோடி இழப்பு
Published : Jan 01, 2020 3:45 AM
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களால் அசாமிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அசாமில் வன்முறை, தீவைப்பு சம்பவங்கள் ஏற்பட்டதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமைதி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகத் தலைவர் ஜெயந்த் மல்லா பரூவா, வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமின்றி உள்நாட்டு பயணிகளின் வருகையும் குறைந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டங்கள் காரணமாக பல நாடுகளும் தங்கள் குடிமக்களுக்கு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்வதற்கான பயண ஆலோசனைகளை வழங்கியதை தொடர்ந்து அசாமில் சுற்றுலா பாதிக்கப்பட்டதாக கூறினார்.
டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரைதான் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்றும், தற்போது வருகை குறைந்துள்ள நிலையில் அடுத்த 2 மாதங்களில் நிலைமை சீரடைந்துவிடும் என்றும் அசாம் சுற்றுலாக் கழகத் தலைவர் குறிப்பிட்டார்.
எனினும் சுற்றுலா சீசனின் உச்ச பருவத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, ஒட்டுமொத்த 2019-20 நிதியாண்டில் சுற்றுலா வளர்ச்சியில் 30 சதவீதம் வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக ஜெயந்த் குறிப்பிட்டார்.