ஒரு கொலையால் வெளிவந்த மற்றொரு கொலை..!! 5 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கணவன்
Published : Nov 19, 2024 7:38 PM
ஒரு கொலையால் வெளிவந்த மற்றொரு கொலை..!! 5 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கணவன்
Nov 19, 2024 7:38 PM
கோவை மாவட்டத்தில் மிளாகாய் பொடி தூவி இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரித்த போலீசார் , 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்து என்று மூடிமறைக்கப்பட்ட மற்றொரு கொலை சம்பவத்தை கண்டுபிடித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் வாகராயம்பாளையத்தில் கடந்த 15 ஆம் தேதியன்று வீட்டில் தனியாக இருந்த இளங்கோவன் என்பவரை பைக்கில் முகமூடி அணிந்து வந்த கும்பல், மிளகாய்ப் பொடியை தூவி, கழுத்தை அறுத்து கொலை விட்டு தப்பி சென்றது.
கொல்லப்பட்ட இளங்கோவன் மொபைலை சோதனை செய்தபோது அடிக்கடி அமிர்தராஜோடு பேசிவந்தது தெரியவந்ததால், போலீசார் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அவரது நண்பர்கள் அமிர்தராஜ் என்பவரையும், அவரது மனைவி கலைவாணியையும் பிடித்து விசாரித்தனர்.
சந்தேகமடைந்த போலீசார் தனது பாணியில் அமிர்தராஜிடம் விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
தனது மனைவி விஜயலட்சுமியுடன் சத்தியமங்கலத்தில் வசித்து வந்த அமிர்தராஜ் , கோவை வாகராயம்பாளையத்தில் வீடு ஒன்று வாங்கியுள்ளார். வீட்டை பார்க்க அடிக்கடி வந்து சென்றபோது அதே பகுதியை சேர்ந்த கலைவாணி என்ற பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த விஜயலட்சுமி கணவர் அமிர்தராஜுடன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. தனது தகாத உறவுக்கு இடையூறாக இருந்த மனைவி விஜயலட்சுமியை 2019 ஆம் ஆண்டு அமிர்தராஜ் கூலிப்படை வைத்து கொலை செய்ததாகவும், கொலையை மறைக்க தனது மனைவி லாரி விபத்தில் உயிரிழந்ததாக புகார் அளித்துள்ளார். போலீசாரும் விபத்தில் உயிரிழந்ததாக வழக்கை முடித்து வைத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அமிர்தராஜ், காதலி கலைவாணியை தனது மனைவியாக்கிக் கொண்டு அவரது 2 பிள்ளைகளோடு வாகராயம்பாளையத்தில் வசிந்துவந்தார். தனது மனைவி விஜய லட்சுமியை கொலை செய்த கூலிப்படைக்கு உதவியதால் இளங்கோவனை தனக்கு சொந்தமான குடியிருப்பில் வாடகை இன்றி குடியிருக்க அனுமதித்தார் அமிர்தராஜ்
அண்மையில் இளங்கோவனிடம் வாடகை கேட்ட போது அவர் வாடகையும் தராமல் , வீட்டையும் காலி செய்ய மறுத்ததாக கூறப்படுகின்றது. மேலும் விஜயலட்சுமி கொலையை போலீசில் சொல்லி விடுவேன் என்றும் இளங்கோவன் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அமிர்தராஜும், அவரது காதலி கலைவாணியும் மற்றொரு கூலிப்படையை ஏவி இளங்கோவனை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அமிர்தராஜ், கலைவாணி, இருவரையும் போலீசார் கைது செய்தனர். போலீசார் அமிர்தராஜை கைது செய்ய முயன்றபோது அமிர்தராஜ் தப்பி ஓடியதில் கீழே விழுந்து கையில் காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.