பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவர் கால்வாயில் விழுந்து பலி..! ஆற்றில் இருந்து சடலம் மீட்பு
Published : Oct 09, 2024 6:56 AM
பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவர் கால்வாயில் விழுந்து பலி..! ஆற்றில் இருந்து சடலம் மீட்பு
Oct 09, 2024 6:56 AM
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் கனமழை பெய்து கொண்டிருந்த போது சைக்கிளில் வீடுதிரும்பிய 7 ஆம் வகுப்பு மாணவன் , மழை நீரால் மூழ்கிய சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த நிலையில் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இன்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழை காரணமாக சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது
பள்ளப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த முகமது உஸ்மான் என்ற 12 வயது சிறுவன் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தான். அரசு மருத்துவமனை அருகே சாக்கடைகால்வாயை மூழ்கடித்து சென்ற மழை நீரில் சைக்கிளை ஓட்டிச்சென்ற போது எதிர்பாராத விதமாக சிறுவன் தவறி கழிவு நீர் வடிகாலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
சிறுவன் மழை நீரில் இழுத்துச்செல்லப்பட்டான். இதனை கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர் . கால்வாய் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறுவனை மீட்க இயலவில்லை
கழிவு நீர் சென்று கலக்கும், நங்காஞ்சி ஆற்றுப்பகுதியில் தேடிய அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினர் சிறுவனை சடலமாக மீட்டனர். மழை நேரங்களில் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூடுமானவரை சாலையில் தேங்கி இருக்கும் மழைநீர் பள்ளத்தின் அளவு தெரியாமல் சைக்கிளை இறக்க வேண்டாம் என்றும் மழை நீர் பாய்ந்து ஓடும் நேரத்தில் சைக்கிளில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ள தீயணைப்புத்துறையினர். பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் வாகன ஓட்டிகளில் நலன் கருதி சாலைப் பள்ளங்களை உடனடியாக மூடுவதோடு, மழை நீர் தேங்கி இருக்கும் குழிகள் மற்றும் கால்வாய்களுக்கு தகுந்த தடுப்பு அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.