ஓட்டமுன்னா இது ஓட்டம்.. உரிமையாளர்களை கவுரவித்த கிரேகவுண்ட் நாய்கள் ரேஸ்..!
Published : Sep 13, 2024 6:22 AM
ஓட்டமுன்னா இது ஓட்டம்.. உரிமையாளர்களை கவுரவித்த கிரேகவுண்ட் நாய்கள் ரேஸ்..!
Sep 13, 2024 6:22 AM
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே முதல் முறையாக வெளிநாடுகளில் நடப்பது போன்று கிரே கவுண்ட் வகை நாய்களை வைத்து ரேஸ் நடத்திய குழுவினர், வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு கதாயுதத்தை பரிசாக வழங்கினர்.
கிரேகவுண்ட் ... ஒல்லியான தேகத்துடன் அதிவேகத்தில் ஓடும் வேட்டைத் திறன் மிக்க நாய் இனம்..! இந்தியாவில் பெரிய அளவில் வளர்ப்பில் பிரபலமில்லாத இந்த வகை நாயினம் வெளி நாடுகளில் ரேஸுக்காகவே வளர்த்து வருகின்றனர்.
வெளி நாடுகளில் நடக்கின்ற நாய்களுக்காண ஓட்டபந்தயம் போன்று நெல்லை மாவட்டம் ராதாபுரம் அடுத்த பெருங்குளத்தில் “டாக் ரேஸ்” நடத்தப்பட்டது
32 நாய்கள் பங்கேற்ற இந்த ஓட்ட பந்தயத்தை 2 நாய்கள் வீதம் வாயில் கவசம் அணிந்து ஓட வைத்து, அதில் வெற்றி பெற்ற நாய்களுக்கு மீண்டும் ஓட்டபந்தயம் நடத்தப்பட்டது
நாய்களுக்கு முன்பாக கயிற்றில் கட்டப்பட்ட முயல் பொம்மையை மின்சார மோட்டாரில் கட்டி இழுக்க, இரையை பிடிக்கும் வெறியில் வேகம் எடுத்தன நாய்கள்..!
இந்த போட்டியில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளருக்கு முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், 2 வது பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், 3 வது பரிசாக 6 ஆயிரம் ரூபாயும் , ரொக்க பரிசுடன் நினைவு பரிசாக வெள்ளி முலாம் பூசப்பட்ட கதாயுதம் ஒன்றும் வழங்கப்பட்டது
அந்தப்பகுதி திமுகவினரும், ஆர்.ஆர் ரேஸ் கிளப்பும் இணைந்து நடத்திய இந்த போட்டியில் அதிக அளவிலான கிரே கவுண்ட் இன நாய்கள் பங்கேற்றது. ஓடி முடித்து வந்த நாய்களை அவர்கள் கவனித்த விதம் குத்துச்சண்டை வீரர்களை நினைவுபடுத்தியது..!
நாய்களுக்கான ஓட்டப்பந்தயம் முதல் முறையாக நடப்பதால் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் போட்டியை கண்டு களித்தனர்.