​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஜய் மாநாட்டிற்கு 33 நிபந்தனைகள் 21 கேள்விகளுக்கு பதிலளித்த த.வெ.க 85 ஏக்கரில் தயாராகும் மாநாட்டு இடம்

Published : Sep 09, 2024 6:31 AM



விஜய் மாநாட்டிற்கு 33 நிபந்தனைகள் 21 கேள்விகளுக்கு பதிலளித்த த.வெ.க 85 ஏக்கரில் தயாராகும் மாநாட்டு இடம்

Sep 09, 2024 6:31 AM

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக முதல்மாநாட்டிற்கு 33 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மாநாட்டிற்கு ஒன்றரை லட்சம் பேர் வருவார்கள் என மனுவில் கூறிவிட்டு, பின்னர் போலீசார் எழுப்பிய 21 கேள்விகளுக்கு அளித்த பதிலில் 50 ஆயிரம் பேர் வருவார்கள் என கூறப்பட்டுள்ளது. 

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி கொடியை அறிமுகப்படுத்தி உள்ள நடிகர் விஜய், கட்சியின் கொள்கையை மாநாடு நடத்தி அறிவிப்பதாக தெரிவித்தார். அதன்படி, கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துள்ள வி.சாலையில் 85 ஏக்கர் நிலத்தை கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். வரும் 23-ந் தேதி மாநாடு நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.

மாநாடு நடத்த அனுமதியும் பாதுகாப்பும் கோரி, கடந்த மாதம் 28-ந்தேதி, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் விஜய் கட்சியினர் மனு அளித்தனர்.

அந்த மனுவின் அடிப்படையில், மாநாடு நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக 21 கேள்விகளை கேட்டிருந்தனர் போலீஸார். அனைத்து கேள்விகளுக்கும் விஜய் தரப்பினர் பதிலளித்த நிலையில் மாநாடு நடத்துவதற்கு 33 நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.

மாநாட்டின் மேடை மாநாட்டு இடம், தேசிய நெடுஞ்சாலை பார்க்கிங் வசதி ஆகியவைகளின் வரைபடங்கள் கொடுக்க வேண்டும், வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் யார் தலைமையில் எந்தெந்த ஊரிலிருந்து எவ்வளவு பேர் வருகிறார்கள் என்ற விவரங்களை கொடுப்பதோடு மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் குடிநீர், உணவு ஏற்பாடு செய்ய வேண்டும் என போலீஸார் நிபந்தனை விதித்துள்ளனர்.

மாநாட்டிற்கு 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கூறினாலும், கொடுக்கப்பட்டுள்ள வாகனங்களில் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் 20 ஆயிரம் பேர் தான் வர முடியும் என போலீஸார் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மாநாட்டிற்கு செல்லும் வழி குண்டும் குழியுமாக உள்ளதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சமமான சாலையை அமைக்க வேண்டும். மாநாட்டு மேடை, கட்சியினர் அமரும் இடம் தவிர மற்ற இடங்களை பார்க்கிங் வசதிக்கு பயன்படுத்த வேண்டும். பார்க்கிங், இடத்திற்கும் மேடை மாநாட்டு இடத்திற்கும் இடையே தடுப்பு அமைக்க வேண்டும். கர்ப்பிணிகள், முதியோர்களுக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

விஜய் வந்து செல்லக்கூடிய வழியின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்,
மாநாட்டிற்கு வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜயுடன் வருபவர்களுக்கு வழங்கப்படும் பாஸ் விவரங்களை ஒப்படைக்க வேண்டும் என்பதும் போலீஸாரின் நிபந்தனையில் இடம் பெற்றுள்ளது.

மாநாடு நடைபெறும் இடம் அருகே ரயில்வே சாலை மற்றும் 6 கிணறுகள் உள்ளதால் அந்த பகுதிக்கு மக்கள் செல்லாதவாறு தடுப்புகளை ஏற்படுத்துவதோடு, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடி அலங்காரம், பேனர் போன்றவற்றால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் முடிந்த அளவிற்கு அதனை தவிர்க்க வேண்டும், மழை வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை மற்றும் மின்சார துறையினரிடம் உரிய பாதுகாப்புச் சான்றிதழ்களை பெற வேண்டும். கூம்பு ஒலிபெருக்கி பயன்படுத்தாததோடு, வாணவேடிக்கை கூடாது என்பதும் நிபந்தனையில் உள்ளது.

மாநாட்டு பந்தலில் ஆங்காங்கே எல்இடி திரை அமைப்பதோடு, மாநாட்டு திடல் உள்பட அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். தீயணைப்பு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட வாகனங்களையும் உரிய அனுமதி பெற்று நிறுத்தி வைத்திருக்க வேண்டும் எனவும் நிபந்தனையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து நிபந்தனைகளுடன் இந்த மாநாடு நடைபெறும் என்றும் விரைவில் மாநாட்டிற்கான அதிகாரபூர்வ தேதியை விஜய் அறிவிப்பார் என கட்சியினர் தெரிவித்தனர்.