​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எங்கள பார்த்தால் அப்படியா தெரியுது ? சார் பதிவாளரை தொடர் கேள்விகளால் பதறவிட்டு.. தெறிக்கவிட்ட விவசாயிகள்..!

Published : Sep 04, 2024 6:44 AM



எங்கள பார்த்தால் அப்படியா தெரியுது ? சார் பதிவாளரை தொடர் கேள்விகளால் பதறவிட்டு.. தெறிக்கவிட்ட விவசாயிகள்..!

Sep 04, 2024 6:44 AM

கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை பத்திரப்பதிவு செய்ய மறுப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் சார் பதிவாளரை கேள்விகளால் துளைத்தெடுத்தனர்

அன்னூரில் விவசாய நிலங்களை விற்றாலோ, வாங்கினாலோ பத்திரபதிவு செய்ய மறுத்துவந்த சார்பதிவாளருக்கு எதிராக விவசாயிகளின் எச்சரிக்கை குரல் தான் இது..!

கோவை மாவட்டம் அன்னூரில் 3800 ஏக்கர் பரப்பளவில் அக்கரை செங்கப்பள்ளி ,குப்பனூர், வடக்கலூர்,பொகலூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள இலுப்பநத்தம் , பள்ளேபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது . இதற்கு விவசாய சங்கங்களும் , பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராடியதால் சிப்காட் அமைக்கும் திட்டம் நிறுத்தி வைப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில வாரங்களாக குறிப்பிட்ட அந்த ஊராட்சி பகுதிகளில் சிப்காட் அமைக்க திட்டமிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை குறிப்பிட்ட தனியார் ஒருவர் அதிக அளவு வாங்கிக்குவித்த நிலையில், விவசாயிகள் தங்களுக்குள் நிலங்களை விற்பனை செய்யவும், வாங்கவும் பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் மறுத்து வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் மீண்டும் வெகுண்டு எழுந்த கிராம மக்கள் சம்பவத்தன்று அன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

அப்போது போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த அன்னூர் சார் பதிவாளர் செல்வ பாலமுருகன், பத்திரப்பதிவு செய்ய எந்த தடையும் இல்லை என்றும் விவசாயிகளிடம் யாரோ தவறாக தெரிவித்துள்ளனர் எனவும் கூறிவிட்டு அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முயன்றதால் கோபமடைந்த விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

மக்களை நீங்கள் மதிக்கவில்லை என்றால் உங்களுக்கு அரசு பணியே இருக்காது எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் என சார் பதிவாளரை கேள்விகளால் துளைத்தெடுத்ததால் செய்வதறியாமல் திகைத்து நின்றார் அன்னூர் சார் பதிவாளர்