நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் விமான நிலையத்துக்கு இணையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஐ.எம்.ஏ. எனப்படும் இந்திய மருத்துவச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு ஐ.எம்.ஏ. எழுதியுள்ள கடிதத்தில், பெண் மருத்துவர் வழக்கில் அதிக கவனத்துடன் விசாரணை நடத்தி, அவரது குடும்பத்துக்கு கண்ணியமிக்க இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளை பாதுகாப்பு மண்டலங்களாக அறிவித்து, சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் நியமனம் என பல்வேறு நடைமுறைகளைப் பின்பற்ற யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்குப் பணி நேரம், போதுமான ஓய்வு, பாதுகாப்பான ஓய்வறை உள்ளிட்டவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.