திருப்பத்தூரில் தனியார் பள்ளிக்கு அருகே கார் செட்டில் பதுங்கி போக்குக் காட்டி வந்த சிறுத்தையை 10 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் , வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பத்திரமாக பிடித்தனர்.
சிறுத்தை பதுங்கி இருந்த கார் செட்டை சுற்றி வலைகளைக் கட்டி வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். நள்ளிரவு ஒரு மணி கடந்த நிலையிலும் சிறுத்தை வெளியில் வராததால் சுமார் 2 மணி அளவில் பலத்த சத்தம் எழுப்பி சிறுத்தையை வெளியே வரவழைத்தனர்.
அங்கிருந்து சிறுத்தை வெளியே தப்ப முயன்ற போது வனவிலங்கு மருத்துவ குழுவினர் இரண்டு பேர் ஊசியை செலுத்தியதில் சிறுத்தை மயங்கியது. மயக்கத்தில் பிடிபட்ட சிறுத்தையை மீட்டு கூண்டுக்குள் அடைத்த வனத்துறையினர், மருத்துவ சிகிச்சைக்கு பிறகு சத்தியமங்கலம் காப்பு காட்டில் விடத் திட்டமிட்டுள்ளனர்.