​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3-வது முறையாக பதவியேற்கும் மோடிக்காக தயாராகும் குடியரசுத் தலைவர் மாளிகை!

Published : Jun 08, 2024 6:29 AM



3-வது முறையாக பதவியேற்கும் மோடிக்காக தயாராகும் குடியரசுத் தலைவர் மாளிகை!

Jun 08, 2024 6:29 AM

டெல்லியில் நாளை மாலை 7-15 மணிக்கு 3-வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார், நரேந்திர மோடி. இதை முன்னிட்டு 8000 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, அக்கூட்டணியின் கூட்டம் டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய அரங்கில் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் அனைத்து தலைவர்களும், புதிதாக எம்.பி.க்களாக தேர்தெடுக்கப்பட்டவர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு வந்ததுமே அரசியல் சாசன புத்தகத்தைத் தொட்டு நெற்றியில் வைத்து வணங்கிய பின்பே இருக்கையில் அமர்ந்தார் பிரதமர் மோடி.

கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடியின் பெயரை ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். அமித் ஷா வழிமொழிந்தார். இதன்பின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக பேசி பிரதமராக மோடியை தேர்வு செய்வதற்கு தங்கள் ஆதரவினை தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மக்களவை பா.ஜ.க. தலைவராகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய முடிவை அடுத்து, பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை பிரதமர் மோடி அவர்களது இல்லங்களில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதனையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதன் தொடர்ச்சியாக, ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

பின்னர் பேட்டியளித்த பிரதமர், 9-ம் தேதி மாலை 7-15 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாகவும், அதற்குள் அமைச்சர்கள் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார். 18-வது மக்களவை, ஒரு வகையில், புதிய ஆற்றலுடன், ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.