​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெருங்கும் மக்களவை தேர்தல்.. அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்.. களத்தில் இறங்கி விறுவிறுப்பாக வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்..!

Published : Apr 01, 2024 6:15 PM

நெருங்கும் மக்களவை தேர்தல்.. அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்.. களத்தில் இறங்கி விறுவிறுப்பாக வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்..!

Apr 01, 2024 6:15 PM

கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் மலையரசன், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது உணவகம் ஒன்றில் அவர் தோசை சுட்டு வாக்கு சேகரித்தார்.

ஆரணி தொகுதி தி.மு.க. வேட்பாளர் தரணிவேந்தனை ஆதரித்து கூட்டணி கட்சியினர் வந்தவாசி பகுதியில் பால் வியாபாரம் செய்தும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் வாக்கு சேகரித்தனர்.

ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் லக்காபுரம், சின்னியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகனை திமுக வினர் மலர்தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் அய்யாபுரம், குத்துக்கல்வலசை, அழகப்பபுரம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு கேட்டார்.

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பிரசாரம் செய்த அம்மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் இடையில் முத்துநகர் கடற்கரை பகுதியில் சிறுவர்கவர்களுடன் கிரிக்கெட் விளையாடினர்.

தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு அருகில் இருந்த டீ கடைக்கு சென்று அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து பிரச்சாரம் செய்த முன்னாள் அமைச்சர் வளர்மதி, திமுக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையில் பாதி டாஸ்மாக்கிற்கும், மீதி சைட் டிஷ்ஷுக்கும் செல்வதாக கூறினார்.

திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாசலத்தை ஆதரித்து அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ராமநாதபுரம் தொகுதி பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ராமேஸ்வரத்தில் பிரச்சாரத்தை துவக்கினார். ராமர் இலங்கைக்குச் செல்வதற்கு முன் இராமேஸ்வரத்தில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்ததை சுட்டிக்காட்டிய அவர், தாமும் இராமேஸ்வரத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குவதாக கூறினார்.

தஞ்சாவூர் மக்களவை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் வாண்டையார் இருப்பு கிராமத்தில் கசாப்பு கடையில் கறி வெட்டிக் கொடுத்தும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளிடம் துண்டு பிரசுரம் கொடுத்தும் வாக்கு சேகரித்தார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் பார்வதிபுரம் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தாணுமாலைய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சுசீந்திரம் சுற்று வட்டார பகுதிகளில் அமைச்சர் மனோ தங்கராஜுடன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரான விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர் நகராட்சி பூங்காவில் நடைபயிற்சி செய்த பொதுமக்களிடமும் நடைபயிற்சிக்குப் பின் கல்லூரி சாலையில் டீக் கடை ஒன்றில் டீ குடித்தும் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மதுரை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை ரோகிணி, ராகுல்காந்தியை வெற்றி பெற செய்ய வேண்டுமானால், அதன் ஒரு பகுதியாக வெங்கடேசனையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

திண்டுக்கல் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா, வெங்காயப்பேட்டையில் வெங்காயம் தரம் பிரிக்கும் பணியில் இருந்த பெண்களுடன் சேர்ந்து வேலை செய்தபடி வாக்கு சேகரித்தார்.

சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி கொண்டாலம்பட்டி, பி.நாட்டாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.

விழுப்புரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கண்டாச்சிபுரம், சித்தாத்தூர், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் அமைச்சர் பொன்முடி பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து கதிர்காமம், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளதாக கூறினார்.

தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தி வைகை ஆற்றில் இருப்பது போல புதிய பாலம் அமைக்கப்படும் என நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நெல்லை ஜங்ஷன் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், மத்திய அரசின் 10 ஆண்டு கால மக்கள் நல திட்டங்களை விளக்கினார்

தருமபுரி தொகுதிக்குட்பட்ட இலக்கியம்பட்டி, நியூகாலனி, வெண்ணாம்பட்டி, பிடமனேரி, கடகத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் மணியை ஆதரித்து அக்கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

உதகை அருகே உள்ள கடநாடு கிராமத்தில் நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன், படுகர் இன மக்களின் பாரம்பரிய உடையை அணிந்து பிரச்சாரம் மேற்கொண்டார். தன்னை வெற்றி பெற செய்தால் படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறி வாக்கு சேகரித்தார்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி, சீங்கிலிபட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டபோது, பெண் வாக்காளருடன் சேர்ந்து எம்.ஜி.ஆர் பாடலின் சில வரிகள் பாடி பிரச்சாரம் செய்தார்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ் மற்றும் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் தெலுங்கில் பேசி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வாக்கு சேகரித்த மத்திய சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்திற்கு கிரேன் உதவியுடன் மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும் பாஜகவினர் வரவேற்பு அளித்தனர்.

மத்திய சென்னையில் சுயேச்சையாக போட்டியிடும் தாக்கம் என்ற கட்சியின் வேட்பாளர் செல்வகுமார்,அயனாவரம் பகுதியில் சாலையோரம் உள்ள ஒவ்வொரு கடையாக சென்று தமது சின்னமான தீக்குச்சியை பற்றவைத்துக் காட்டி வாக்கு சேகரித்தார்.

தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கோவிலம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்தபோது அங்குள்ள வாய்க்கால் ஒன்றில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை பார்த்து, அவற்றை அகற்றி மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

கடலூர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து, பத்திரகோட்டை மகா காளியம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்த பின் கூட்டணிக் கட்சியினரோடு சேர்ந்து நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

கடலூர் தொகுதி பா.ம.க வேட்பாளர் தங்கர்பச்சான், புதுகூரைப்பேட்டை கிராமத்தில் கூட்டணி கட்சியினரோடு வீதி வீதியாகச் சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் நத்தம் பேரூராட்சி பகுதியில் கூட்டணி கட்சியினருடன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவெறும்பூரில் உள்ள திருநெடுங்களநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பின் திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் மற்றும் கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தன்னூத்து பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட தென்காசி தொகுதி பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரான ஜான் பாண்டியன், தமிழகத்தில் மட்டும் 57 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுத்தவர் பிரதமர் மோடி எனக் கூறி வாக்குச் சேகரித்தார்.

சேலம் தொகுதி பாமக வேட்பாளர் அண்ணாதுரை, மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி ஒன்றியத்தில் இருசக்கர வாகன அணிவகுப்புடன் திறந்த ஜீப்பில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயனுக்கு ஆதரவாக திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும் நடைபெற்ற பிரச்சாரத்தில் திருத்தணி கோ.அரி மற்றும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் அரண்மனைப்புதூரில் முல்லைநகர் , கோட்டைப்பட்டி , அய்யனார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த போது அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விழுப்புரம் தொகுதியின் பாமக வேட்பாளர் முரளி சங்கர் மலையில் உள்ள முருகன் கோயிலில் தரிசனம் செய்தபின்
கண்டாச்சிபுரம் பகுதியில் வீதி வீதியாக சென்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

கொருக்குப்பேட்டை நாகாத்தம்மன் கோயிலில் இருந்து பிரசாரத்தை துவங்கிய பா.ஜ.க வடசென்னை தொகுதி வேட்பாளர் பால் கனகராஜ், மத்திய அரசின் திட்டங்களை தங்களது திட்டங்கள் போல திமுக விளம்பரம் செய்து வருவதாக கூறினார்.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியுடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனங்களில் கட்சி கொடியுடன் அவர்களை பின் தொடந்து சென்றனர்.

வட சென்னை தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் கொடும்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பெருங்குடி பகுதியில் வாக்கு சேகரித்த தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு கிரேனில் மாலை எடுத்து வந்து அணிவித்தும், மலர் தூவியும் கூட்டணி கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.