​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேவர் ஜெயந்திக்கு சென்ற 10 பேரை பெட்ரோல் குண்டால் கொன்ற A1 தலை சிதைத்து கொலை..! 12 வருடம் காத்திருந்து சம்பவம்

Published : Feb 19, 2024 9:41 PM



தேவர் ஜெயந்திக்கு சென்ற 10 பேரை பெட்ரோல் குண்டால் கொன்ற A1 தலை சிதைத்து கொலை..! 12 வருடம் காத்திருந்து சம்பவம்

Feb 19, 2024 9:41 PM

கடந்த 2012 ஆம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்று விட்டு திரும்பியவர்களின் வேன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அந்த வழக்கில் தொடர்புடைய முதல் குற்றவாளி நீதி மன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பும் போது கரூர் அருகே தலை சிதைத்து கொலை செய்யப்பட்டார்.

மதுரை புளியங்குளத்தை சேர்ந்த 20 பேர், கடந்த 2012 ஆம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்று விட்டு வேனில் சொந்த ஊர் திரும்பிய போது மதுரை ரிங் ரோடு அருகே வேன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 20 பேரும் உடல் கருகிய நிலையில், ஒருவர் பின் ஒருவராக 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேல அனுப்பானடியை சேர்ந்த ராமர் என்கிற குட்ட ராமர் உள்ளிட்ட 11 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

பாதுகாப்பு கருதி 2020 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணை கரூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட குட்டை ராமர் விசாரணைக்கு ஆஜராகிவிட்டு, திங்கட்கிழமை தனது கூட்டாளியான கார்த்திகேயன் உடன் இரு சக்கரவாகனத்தில் புறப்பட்டார். கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தடாகோவிலை அடுத்த தேரப்பாடி பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது இவர்களை பின் தொடர்ந்து ஜீப்பில் வந்த நபர்கள், வழி மறித்து இருவரையும் பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளனர்.

இதில் தலை சிதைக்கப்பட்ட ராமர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த கார்த்திக் வெட்டுக் காயங்களுடன் தப்பிய நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரவக்குறிச்சி காவல் நிலைய போலீசார் ராமரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த கார்த்திக் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அரவக்குறிச்சி காவல் நிலைய போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் , தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்று திரும்பியவர்களின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்துக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக குட்டை ராமர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.