9,175 நெல் மூட்டைகள் அபேஸ்.. நாடகமாடிய ஐ.டி.பி.ஐ வங்கி.. நெத்தியடி கொடுத்த விவசாயிகள்..
Published : Feb 17, 2024 8:41 PM
9,175 நெல் மூட்டைகள் அபேஸ்.. நாடகமாடிய ஐ.டி.பி.ஐ வங்கி.. நெத்தியடி கொடுத்த விவசாயிகள்..
Feb 17, 2024 8:41 PM
கும்பகோணத்தில் விவசாயிகளிடம் அடமானமாக பெற்ற 9,175 நெல் மூட்டைகளை மோசடி செய்த புகாருக்குள்ளான ஐடிபிஐ வங்கி நிர்வாகம், 3 விவசாயிகளுக்கு இழப்பீடாக 1 கோடி ரூபாய் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
கும்பகோணத்தை சேர்ந்த விவசாயிகளான பரஞ்சோதி, தேவி மற்றும் சூரியகுமாரி ஆகிய மூவரும் 400 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு 9,175 நெல் மூட்டைகளை அடமானமாக வைத்து கும்பகோணம் லட்சுமி விலாஸ் தெருவில் உள்ள ஐடிபிஐ வங்கி கிளையில் ரூபாய் ஒரு கோடியே 45 லட்சம் கடன் பெற்றிருந்தனர்
இந்த நெல் மூட்டைகள் அனைத்தும்,ஸ்டார் அக்ரி நிறுவனத்தின் புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டியில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், 11 மாத கால இடைவெளியில், கடன் தொகையினை வட்டியுடன் விவசாயிகள் முழுமையாக செலுத்தியுள்ளனர்.
பின்னர், புதுக்கோட்டை கிடங்கில் உள்ள நெல் மூட்டைகளை டெலிவரி எடுக்க ஆணையை பெற்றுள்ளனர். ஆனால், கிடங்கில் சென்று பார்த்தபோது நெல் மூட்டைகள் இல்லாததால் மூன்று விவசாயிகளும் அதிர்ச்சியடைந்தனர்,
இது தொடர்பாக ஐடிபிஐ வங்கி நிர்வாகம் மற்றும் அவர்களது அங்கீகாரம் பெற்ற கிடங்கை பராமரிக்கும் தனியார் நிறுவனத்திடம் கேட்ட போது முறையான பதில் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில், சம்மந்தப்பட்ட விவசாயிகளிடம் 9,175 மூட்டைகளையும் டெலிவரி செய்துவிட்டதாக அப்பட்டமாக பொய் கூறி, ஐ.டி.பி.ஐ வங்கி நாடகமாடியுள்ளது.
டெலிவரி செய்ததற்கான ஆவணங்களை, எத்தனை வாகனங்களில் எத்தனை மூட்டைகள், எப்போதெல்லாம் டெலிவரி செய்யப்பட்டது என்பதற்கான ஆவணங்களை சம்மந்தப்பட்ட நிறுவனம் வழங்க மறுத்தது .
இதனால், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த நூதன மோசடி பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையில், கடனை வட்டியுடன் முழுமையாக செலுத்திய பிறகும் நெல் மூட்டைகளை சம்மந்தப்பட்ட 3 விவசாயிகளுக்கும் திருப்பி வழங்காதது தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, நுகவர்வோர் ஆணைய தலைவர் மோகன்தாஸ், வழக்கில் தொடர்புடைய ஐடிபிஐ வங்கி விவசாயிகளுக்கு சொந்தமான 9,175 நெல் மூட்டைகளையும் 45 தினங்களுக்குள் முறைப்படி ஒப்படைக்க வேண்டும் தவறினால், இழப்பீடாக ஒரு கோடியை ரூபாயை கடந்த 19.09.2019 முதல் இழப்பீடு வழங்கும் நாள் வரை 12 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.
அதோடு, சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு மன உளைச்சளை ஏற்படுத்தியதற்காக 10 லட்சம் இழப்பீடும், வழக்கு செலவுக்காக ஒரு லட்சமும் வழங்கிடவும் ஆணைய தலைவர் உத்தரவிடப்பட்டுள்ளார்.