பொருளாதார இழப்பால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டன.
அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அ.தி.மு.க. பொதுக்குழு கூடியது.
இதையொட்டி இப்பகுதி முழுவதும் அலங்கார வளைவுகள், வாழைமரங்கள் கட்டப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பொதுக் குழு உறுப்பினர்கள் 2 ஆயிரத்து 800 பேர் அழைப்பிதழ்களை பரிசோதித்த பின் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பொதுக்குழுவில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செண்டை மேளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
பொதுக் குழுக் கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடும் வகையில் அ.தி.மு.க.வினர் களப்பணி ஆற்றிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொருளாதார இழப்பால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்றுகளை கட்டுப்படுத்த மருத்துவ உதவிகளை செய்ய மாநில அரசு தவறியதாக கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.