மிக்ஜாம் பாதிப்பில் பாடம் கற்றுக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் தென் மாவட்டங்களில் அவதி ஏற்பட்டிருக்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சிறப்புரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, வெள்ள பாதிப்பு பிரச்சினையில் மத்திய அரசை காரணம் காட்டி மாநில அரசு தப்பிக்க பார்ப்பதாக தெரிவித்தார்.
மக்கள் பிரச்சனையை உணர்ந்து தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், சேத விவரங்களை கணக்கிடாமல் நாடாளுமன்றத்தில் நிதி கேட்டால் எப்படி கிடைக்கும் என்று கேள்வி எழுப்பினார்.
பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளும் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே பார்ப்பதாக கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு எந்த காலத்திலும் கொடுத்தது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் புதிய திட்டங்கள் ஏதும் கொண்டுவரப்படவில்லை என்று கூறிய இ.பி.எஸ்., நாடாளுமன்ற தேர்தல் வருவதற்குள் அமைச்சர்கள் சிலர் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருப்பார்கள் என்றார்.
அடுத்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்கள் சிலரும் அழைக்கப்படுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். உரைக்குப் பின் எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளி வாள் வழங்கப்பட்டது.