ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
ஜெய்பூரில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் நடைபெற்ற பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பஜன் லால் சர்மாவின் பெயரை முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே முன்மொழிந்தார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அவரை ஒரு மனதாக தேர்வு செய்தனர்.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் மாணவர் அணியான ஏ.பி.வி.பி.யில் செயலாற்றியவரான பஜன்லால் சர்மா, ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. பொதுச் செயலாளராக 4 முறை பதவி வகித்தவர். சங்கனேர் தொகுதியில் தாம் போட்டியிட்ட முதன் முறையிலேயே வெற்றி பெற்று முதலமைச்சராகி உள்ளார்.
கூட்டத்தின் போது, ராஜ்புத்ர சமூகத்தை சேர்ந்த தியா குமாரி மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த பிரேம் சந்த் பரைவா ஆகிய 2 பேர் துணை முதலமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்த பஜன்லால் சர்மா, ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினார்.