பா.ஜ.க.வுடனான கூட்டணி விலகல் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தங்களது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளதாகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் பேட்டியளித்த அவர், கூட்டணி நீட்டிப்பது தொடர்பாக ஆலோசித்ததாக பா.ஜ.க.வின் வி.பி.துரைசாமி கூறியது அவரது சொந்த கருத்து என கூறியுள்ளார்.
அமித் ஷாவோ, நட்டாவோ, பிரதமர் மோடியோ அ.தி.மு.க.வுக்கு எந்த அழுத்தத்தையும் தரவில்லை என கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.விடம் தொகுதிப் பங்கீடு குறித்து பா.ஜ.க.வினர் யாரும் பேசவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாற்ற அ.தி.மு.க. கோரியதாக கூறுவது தவறான தகவல் என்றும் விளக்கமளித்துள்ளார்.
டெல்டா விவசாயிகள் மீது முதலமைச்சருக்கு அக்கறை இருந்திருந்தால் கர்நாடகாவிடம் பேசி தண்ணீரை பெற்றுத் தந்திருப்பார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தண்ணீர் இன்றி கருகும் பயிர்களை கண்டு டெல்டா விவசாயிகள் வடிக்கும் கண்ணீரை தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டியுள்ளார்.