தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தனது கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாயை திடீரென வரவு வைத்தாக கால் டாக்ஸி ஓட்டுனர் ஒருவர் கூறியுள்ளார்.
சென்னையில் ஊபர் கால் டாக்ஸி ஓட்டி வரும் பழனியை அடுத்த நெய்க்காரன்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற அந்நபர், தமது செல்ஃபோனுக்கு கடந்த 9 ஆம் தேதி குறுஞ்செய்தி ஒன்று வந்ததாகவும், அதில் தமது வங்கிக் கணக்கில் 9 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறியுள்ளார்.
தமது வங்கிக் கணக்கில் 105 ரூபாய் மட்டுமே இருந்த நிலையில், ஏமாற்றுப் பேர்வழிகள் யாரோ குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார்களோ எனற முதலில் சந்தேகப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் தமது நண்பருக்கு முதலில் ஆயிரம் ரூபாயையும், பின்னர் அடுத்தடுத்து 2 முறை 10 ஆயிரம் ரூபாயும் அனுப்பிப் பார்த்துள்ளார்.
அந்தத் தொகை நண்பருக்கு சென்ற பிறகே தமது கணக்கில் பணம் வந்திருப்பதை உறுதி செய்து கொண்டதாக தெரிவித்துள்ள ஓட்டுநர் ராஜ்குமார், தாம் 21 ஆயிரம் எடுத்த சிறிது நேரத்தில் தமது கணக்கில் இருந்த பணத்தை வங்கி நிர்வாகம் திருப்பி எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து தொடர்பு கொண்டு பேசி ஒரு தரப்பினர், 21,000 ரூபாயை திருப்பித் தர வேண்டாம் என்று கூறிய நிலையில், மற்றொருவர் தம்மை தொடர்பு கொண்டு தம்மை சிறையில் தள்ளப் போவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
பணத்தை திருப்பித் தருவதற்காக தி.நகர் கிளையை அணுகிய போது, அந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுமாறும், தேவைப்பட்டால் புது டாக்ஸி வாங்க கடன் கொடுக்கத் தயார் என்றும் வங்கி ஊழியர்கள் கூறியதாக ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.