ஏற்றுமதி தடையை நீக்கி இந்தியாவுக்கு 4 ஆயிரம் மெட்ரிக் டன் ஹில்சா வகை மீன்களை அனுப்ப வர்த்தகர்களுக்கு வங்கதேச அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆற்று மீன்களின் ராணி என்று கூறப்படும் ஹில்சா மீன்கள், மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன.
ஹில்சாவுக்கு புவிசார் குறியீடு பெற்ற வங்க தேச அரசு, அம்மீனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு தடைவிதித்தது. மேற்குவங்கத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு அக்டோபர் மாதம் வரை ஹில்சாவுக்கான தடையை வங்கதேச அரசு தற்போது நீக்கியுள்ளது.
முன்னதாக 2020-ம் ஆண்டில் கொல்கத்தா வந்த வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவிடம், ஹில்சா மீன் மீதான ஏற்றுமதி தடையை நீக்க மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.