திருப்பத்தூர் மாவட்டத்தில் ரயில் நின்று செல்லும் விழாவின் போது பாஜக மற்றும் திமுகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு வரை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வராததால் ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் க.தேவராஜூம், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரையும் பேசும் போது, மேடையில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என பாஜகவினர் அதிகப்படியான சேர்களை போட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால் இடப்பற்றாக்குறையைச் சுட்டிக் காட்டி திமுகவினர் மறுப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த பாஜகவினர் கோஷமிடத் தொடங்கினர். பதிலுக்கு திமுகவினர், எதிர் முழக்கமிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவிய நிலையில் கூட்டம் முடிந்ததும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அடுத்த நொடியில் இரு கட்சியினரும் கட்டுக் கோப்பாக அமைதியாக நின்றனர்.
கொள்கை ரீதியாக எதிர் எதிர் முகாம்களில் இருந்தாலும் தேசம் என்றவுடன் இரு சாராரும் அமைதி காத்தது பார்த்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.