சட்டப்பேரவையில், அதிமுக தலைமையகம் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அதிமுக தலைமையகம் தாக்குதல் விவகாரம் தொடர்பாக பேசிய அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், கட்சி அலுவலகத்திற்கு முறையான பாதுகாப்பு கேட்டும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர், அதிமுக அலுவலகத்திற்கு உள்ளே பாதுகாப்பு வழங்கமுடியாது எனவும், வெளியே உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அப்போது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி, திமுக இரண்டாக பிளவுபட்ட நேரத்தில் அண்ணா அறிவாலயத்திற்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா போதிய பாதுகாப்பு அளித்ததாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் நுழைவு வாயில் பூட்டபட வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பிய நிலையில், தக்க பாதுகாப்பு அளித்திருந்தால் இந்த சம்பவமே நடைபெற்றிருக்காது என எதிர்க்கட்சித்தலைவர் இபிஎஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், காவல்துறை முறைப்படி பாதுகாப்பு அளித்தது எனவும், இவ்விவகாரத்தில் 16 பேர் கைது செய்யப்பட்டு 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.