திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே கிணறு வெட்டுவதற்காக வைக்கப்படவிருந்த வெடிமருந்துகள் வெடித்ததில் இளைஞர் உயிரிழந்தார்.
வடப்பருத்தியூரில் செல்லத்துரை என்ற விவசாயிக்கு சொந்தமான தோட்டத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்துள்ளது. அதற்கு தேவையான வெடி மருந்துகளை கிணற்றிற்கு அருகே தகர ஷெட் அமைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை எட்டு மணி அளவில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்ட நபர், அந்த வெடி மருந்து இருந்த செட்டிற்கு சென்றுள்ளார் அப்போது பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்துள்ளது.
அதில் அவர் உடல் 60க்கும் மேற்பட்ட துண்டுகளாக 100 அடி தூரத்திற்கு சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.. இந்த சம்பவம் நடந்த இடத்தில் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் வெடி மருந்து நிபுணர் ஆகியோர் திண்டுக்கல்லில் இருந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வெடி மருந்து நிபுணர் கூறும் போது மருந்தை அதிகப்படியாக இருப்பு வைத்திருந்ததும் மிகவும் சக்தி வாய்ந்த வெடி மருந்து இருந்ததுமே இந்த வெடி விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.