ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள், நிர்வாகிகள் வீடுவீடாகச் சென்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மதத்தை வைத்து அரசியல் செய்தால் தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என்றார்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து வீதிவீதியாக சென்று பிரச்சாரம் செய்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது என்ற பாடலை ராகத்துடன் பாடி வாக்கு கேட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவினை தமிழ்நாடே எதிர்பார்த்து கிடக்கிறது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து பேசிய பிரேமலதா, ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்தை சொன்னவர் கேப்டன் தான் என்றும் அதனை தற்போது மற்ற மாநிலங்கள் காப்பி அடித்து அமல்படுத்தி வருகின்றன என்றும் கூறினார்.