குடிச்சிட்டு வண்டி ஓட்டுனா தப்புல்ல... அதான் அப்படியே கொர்ர்ர்ர்..! மர்ம காரால் பரபரத்த கோவை
Published : Feb 21, 2023 6:47 PM
குடிச்சிட்டு வண்டி ஓட்டுனா தப்புல்ல... அதான் அப்படியே கொர்ர்ர்ர்..! மர்ம காரால் பரபரத்த கோவை
Feb 21, 2023 6:47 PM
கோவை - மேட்டுப்பாளையம் சாலையில், கவுண்டம்பாளையத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை வேளையில் மர்மமாக நின்ற காருக்குள் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்த நிலையில், காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த கார் ஒன்று புழுதியான நிலையில் மேம்பாலத்திற்கு அருகில் சாலையிலேயே நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்தது.
போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கக்கூடிய அந்த சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த மர்மக்காரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காரின் அருகே சென்று பார்த்தபோது ஒரு நபர் படுத்திருந்தார் . காரின் கதவை தட்டி அவரை எழுப்ப முயன்றனர். அவர் எழுந்திருக்க வில்லை
காரில் தட்டிப்பார்த்தும், கொட்டிப்பார்த்தும் டயர்டானவர்கள், ஒரு வேளை உள்ளே இருப்பவர் இறந்திருக்கலாமோ ? என்ற அச்சத்தில் சாலையில் மர்மக்கார் நிற்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசாரும் தங்களால் இயன்ற வித்தையெல்லாம் காட்டி பார்த்தும் காருக்குள் படுத்திருந்தவரை எழுப்ப இயலவில்லை. ஒரு வேளை இறந்து போயிருப்பார் போல என்று முடிவுக்கு வந்த காவல்துறையினர், கார் கண்ணாடியை உடைத்து கதவை திறந்தனர். தொட்டுப்பார்த்தால் காருக்குள் இருந்த நபர் மது போதையில் காணப்பட்டார்.
குடிபோதையில் இருந்த நபரை வெளியேற்றி காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். காருக்குள் போதையில் இருந்த நபர் கோவை வாகராயம்பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பதும் அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி புரிந்து வரும் நிலையில் கடுமையான மன உளைச்சல் காரணமாக காலையிலேயே அதிகளவிலான மது அருந்தியது தெரியவந்தது.
போதையில் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் தொடர்ந்து வாகனம் ஓட்ட முடியாமல் சாலையிலேயே காரை நிறுத்தி விட்டு அயர்ந்து உறங்கியதாக ரஞ்சித் போலீசாரிடம் தெரிவித்து மன்னிப்புக்கேட்டுள்ளார்