பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவால் காலமானார். தாயாரின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி, மிக உருக்கத்துடன் இறுதிச்சடங்குகளை செய்து தகன மேடையில் எரியூட்டினார்.
100 வயதான ஹீராபென் மோடி, வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமையன்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்று இன்று அதிகாலை காலமானார். ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.
புத்திசாலித்தனத்துடன் வேலை செய்ய வேண்டும், தூய்மையான வாழ்க்கையை வாழ வேண்டும் என 100வது பிறந்தநாளில் தனது தாயார் ஹீராபென் தெரிவித்த கருத்து எப்போதும் தனது நினைவில் நீங்காமல் இடம்பெற்றிருக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்நிலையில், பிரதமரின் தாயார் உடல் மருத்துவமனையில் இருந்து காந்தி நகரில் உள்ள இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு விரைந்த பிரதமர் மோடி, தனது தாயார் உடலின் முன்பு விழுந்து கும்பிட்டு கண் கலங்கினார்.
பின்னர், ஹீராபென் மோடியின் இறுதி ஊர்வலம் எளிமையாக நடைபெற்றது. தனது தாயார் உடலை தகன மேடைக்கு தோளில் சுமந்து எளிமையாக பிரதமர் மோடி சென்றார்.
மிக உருக்கமாக தாயாருக்கு இறுதிச்சடங்குகளை செய்த பிரதமர் மோடி, கண்ணீருடன் உடலை தகனம் செய்தார்.
இக்கடினமான நேரத்தில் பிரார்த்தனைகள் செய்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்ட பிரதமர் மோடியின் குடும்பத்தினர், அனைவரும் திட்டமிட்டபடி தங்களது பணியை தொடருங்கள் என்றும், அதுவே ஹீரா பென்னிற்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், தாயார் உடலை எரியூட்டிய சில மணி நேரத்திலேயே மேற்குவங்கத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.