​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எவ்ளோ நேக்கா என்னை கம்பிக்குள்ள கொண்டு வந்துட்ட..! புலம்பும் பெண் இன்ஸ்பெக்டர்..!

Published : Oct 20, 2022 3:20 PM



எவ்ளோ நேக்கா என்னை கம்பிக்குள்ள கொண்டு வந்துட்ட..! புலம்பும் பெண் இன்ஸ்பெக்டர்..!

Oct 20, 2022 3:20 PM

சென்னையில் வரதட்சனை கொடுமையால் பிரிந்து சென்ற மனைவி தனது உடமைகளை எடுப்பதறக்காக கணவர் வீட்டின் பூட்டை மாற்று சாவி மூலம் திறந்து உள்ளே சென்றது தொடர்பான வழக்கை சாதகமாக முடித்து வைப்பதற்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

கோவையைச் சேர்ந்த மோனிகாஸ்ரீக்கும் சென்னை கொளத்தூரை சேர்ந்த மருத்துவர் வினோத் குமாருக்கும் 2020-ஆம் ஆண்டு திருமண நடந்தது. திருமணத்தின் போது பேசப்பட்ட வரதட்சனையான 200 சவரன் நகையை பெண் வீட்டார் வழங்கவில்லை எனக் கூறி, மனைவி மோனிகா ஸ்ரீயை மருத்துவர் வினோத்குமார் தாக்கி கொடுமைப்படுத்தி வந்ததாகவும், தனக்கு தனியாக கிளினிக் வைத்து கொடுத்தால் மட்டுமே வீட்டிற்கு வர வேண்டும் என கூறி, மோனிகாஸ்ரீயை வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கணவர் வினோத் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மோனிகாஸ்ரீ கடந்தாண்டு வரதட்சணை கொடுமை புகார் அளித்தார். இதன்பேரில் வினோத்குமார் உள்பட 8 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தனது உடமைகளை எடுப்பதற்காக கணவர் வினோத்குமார் வீட்டுக்கு வந்த மோனிகாஸ்ரீ, வீடு பூட்டப்பட்டிருப்பதை கண்டு, தனது கையில் உள்ள மாற்றுச் சாவியை பயன்படுத்தி பூட்டை திறந்து உடமைகளை எடுக்க உள்ளே சென்றுள்ளார். இதனை அத்துமீறி தனது வீட்டுக்குள் நுழைந்ததாக மோனிகாஸ்ரீ மீது வினோத்குமார் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை விசாரித்த போலீசார், கணவர் வீட்டிற்குள் மனைவி வருவது தவறில்லை என்ற அடிப்படையில் வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

சமாதானம் அடையாத வினோத்குமார், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தன்னை விட்டு பிரிந்து சென்ற மோனிகாஸ்ரீ தனது அனுமதி இல்லாமல் வீட்டின் பூட்டை திறந்து நுழைந்தது குறித்து மறு விசாரணை நடத்த உத்தரவு பெற்று வந்தார்.
இதனையடுத்து அந்த வழக்கை கூடுதலாக விசாரித்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அனுராதா, ஏற்கெனவே பழைய வழக்கில் மோனிகாவிடம் ஒரு லட்ச ரூபாய் வரை பேரம் பேசி லஞ்சம் பெற்றதாக கூறப்படுகின்றது. புதிய வழக்கை அவருக்கு சாதகமாக முடித்து தருவதற்கு மேலும் 20 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மோனிகா ஸ்ரீ அளித்த புகாரின் அடிப்படையில், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் யோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை மோனிகா ஸ்ரீ கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டதும் காவல் ஆய்வாளர் அனுராதாவை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். ‘இந்த புள்ளைய நம்பினதுக்கு எவ்ளோ நேக்கா என்ன சிக்கவச்சிருச்சி’... என்று ஆதங்கம் தெரிவித்த அனுராதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து அனுராதாவை பணியிடை நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.