குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றில் கட்டப்பட்டுள்ள அடல் பாலத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்துள்ளார். காதி உத்சவத்தில் பங்கேற்ற பிரதமர், வர இருக்கும் பண்டிகை காலங்களில் காதி பொருட்களை மட்டுமே பரிசாக அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, அகமதாபாத்தில் காதி உத்சவ் என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராட்டையில் நூல் நூற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ராட்டையை சுற்றியது தன்னை குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் சென்றதாக குறிப்பிட்டார். சுதந்திர இயக்கத்தின் சக்தியாக காதி மாறி, அடிமைச் சங்கிலிகளை உடைத்து எறிந்ததாக கூறினார். அதே காதி, இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வதற்கும் தன்னிறைவு பெறுவதற்கும் ஒரு உத்வேகமாக மாறும் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சபர்மதி ஆற்றின் குறுக்கே 300 மீட்டர் நீளத்தில், 14 மீட்டர் அகலத்தில் கட்டப்பட்டுள்ள பாதசாரிகளின் பயன்பாட்டுக்கான அடல் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு எல்இடி மின் விளக்குகளால் பாலம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது...பாலத்தை திறந்து வைத்த பின் பிரதமர் அதில் நடந்து சென்று பார்வையிட்டார்.
அடல் பாலம் சபர்மதி ஆற்றின் இரு கரைகளை இணைப்பது மட்டுமல்லாமல், அதன் வடிவமைப்பு மற்றும் பொறியியலில் தனித்துவமானது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.