அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இரட்டைத் தலைமையை ரத்துச் செய்து, பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யத் திருத்தம் கொண்டுவந்தும், எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச்செயலாளராக நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்குப் பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவில் இரட்டைத் தலைமையை ரத்துச் செய்து பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யக் கட்சி விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்தலை இன்றைய தேதியில் இருந்து நான்கு மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என்று தீர்மானித்தும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கான அதிகாரிகளாக நத்தம் விசுவநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை நியமித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதுவரை இடைக்காலப் பொதுச்செயலாளராகக் கட்சியை நடத்தி வர எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.