அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்துவரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பிலும், இபிஎஸ் தரப்பிலும் பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்துவரும் நிலையில், இன்றும், 7 வது நாளாக ஓபிஎஸ் தரப்பும், இபிஎஸ் தரப்பும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டன.
பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்துள்ள கடிதத்தை வைத்திலிங்கம் வெளியிட்டார். இபிஎஸ் தரப்பிலிருந்து சாதகமான பதில் வராவிட்டால் நீதிமன்றத்தையும் ,தேர்தல் ஆணையத்தையும் நாட முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இதனிடையே, அதிமுக பொதுக்குழு நடைபெறும் சென்னை வானகரம், ஸ்ரீவாரு மண்டபத்தில் இ.பி.எஸ் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.ஏ.செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் மற்றும் கே பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
திட்டமிட்டப்படி வருகிற 23 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு நடைபெறும் என்று கே.பி.முனுசாமி பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், கட்சி சட்ட விதிகளில் மாற்றம் செய்ய பொதுக்குழுவிற்கே முழு அதிகாரம் உள்ளது என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் கட்சி அலுவலகத்தில் தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது ஒரு மரபு தான் என்றும், கட்சி விதிகளின் படி சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்றும் இபிஎஸ் ஆதரவாளரான வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டுமென கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தை ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தொடர்ந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டுமென்ற சூரியமூர்த்தி என்பவரின் மனு மீதான விசாரணையில் கடிதம் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், கூட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி பாலகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாளை மறுநாள் பதில் அளிக்க சென்னை 23ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.