அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்த கருத்துகள் அதிகரித்து வரும் நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ். தொடர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமையை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்ற முழக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் அவரவர் வீடுகளில் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டனர்.
அதிமுகவில் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 64 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன், கே.பி அன்பழகன், சி.வி சண்முகம், தங்கமணி, விஜய பாஸ்கர், காமராஜ், ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோருடன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நள்ளிரவு வரை ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும், கட்சியின் நிர்வாகிகளும் நேரில் சென்று ஆலோசனையில் பங்கேற்றனர்.
மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஆதரவுடன் தனது பலத்தை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து வரும் நிலையில், சட்டவிதிகளை கையில் எடுத்துள்ள ஓ.பன்னீர் செல்வம், அதனை கொண்டு ஒற்றைத் தலைமைக்கு தொடர் எதிர்ப்பை காட்டி வருகிறார்.
முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
வரும் 23ஆம் தேதி அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தரப்பினர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்சின் கட்சி மற்றும் அமைச்சர் பதவி குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டுள்ள அவரது தரப்பினர், கட்சியில் அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.