​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒற்றை தலைமை விவகாரம்.. அ.தி.மு.க.வில் பரபரப்பான காட்சிகள்..!

Published : Jun 18, 2022 8:21 PM

ஒற்றை தலைமை விவகாரம்.. அ.தி.மு.க.வில் பரபரப்பான காட்சிகள்..!

Jun 18, 2022 8:21 PM

ஒற்றை தலைமை விவகாரத்தில், அதிமுகவில் இன்றும் தொடர் ஆலோசனைகள் நடைப்பெற்றன. ஓபிஎஸ் சின் பூச்சாண்டிகளுக்கு அஞ்சமாட்டேன் என ஜெயக்குமாரும், ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளதாக ஜேசிடி பிரபாகரனும் கூற பரபரப்பான காட்சிகள் அரங்கேறின....

கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்ற கோஷம் அதிமுகவில் கடந்த சில நாட்களாக வலுத்துவரும் நிலையில், ஓபிஎஸ் சும், இபிஎஸ் சும் தனித்தனியாக இன்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

23 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை இறுதி செய்வதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானக்குழு இன்றும் தீவிர ஆலோசனை நடத்தியது.

இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் சும் கலந்துக் கொண்டார். கூட்டத்தில் கலந்துக் கொள்ள வந்த ஜெயக்குமாருக்கு பாதுகாப்பாக வந்த ஒருவர் தாக்கப்பட்டார். இபிஎஸ் ஆதரவாளரான ஜெயக்குமார் உள்ளிட்டோருடனும் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.

 ஒற்றை தலைமை கோரிக்கையை தாம் எழுப்பியதில் எந்தவித தவறும் இல்லை என்றும் அடிமட்ட தொண்டர்களின் எண்ணத்தையே தாம் பிரதிபலித்ததாகவும் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.ஓபிஎஸ் சின் பூச்சாண்டிக்கு எல்லாம் தாம் பயப்பட மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

 ஒற்றை தலைமை பிரச்சனையில் ஓபிஎஸ் மிகவும் மனவருத்தத்தில் இருப்பதாகவும், ஒற்றை தலைமை தீர்மானம் எதுவும் சேர்க்கப்படவில்லை என்றும் ஜே சி டி பிரபாகரன் தெரிவித்தார்.

 இதன் பின்னர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய ஜெயக்குமார், ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா என்பதை கட்சிதான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்

 இதனிடையே, பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து மும்முரமாக ஆலோசனை நடத்திவரும் அதிமுகவின் தீர்மான குழு இன்று அவற்றை இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.