அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்துவரும் நிலையில், ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் 5 வது நாளாக இன்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை அதிமுகவில் வலுத்து வரும் நிலையில், 5 வது நாளாக இன்றும் ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் கட்சி நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்
தேனி மாவட்ட செயலாளர் சையது கான், விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் அசோகன், முன்னாள் எம்.பி மைத்ரேயன் அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை செல்வராஜ், மனோஜ் பாண்டியன், வேளச்சேரி அசோக் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இதேபோல், எதிர்கட்சித்தலைவரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, முக்கூர் சுப்பிரமணியன், தளவாய் சுந்தரம், கே பி முனுசாமி, சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனிடையே, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் இன்று இறுதி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தலைமை அலுவலகத்தில் இன்றும் தீர்மானக்குழு கூடி ஆலோசனை நடத்தி வருகிறது.
இதில், பொன்னையன், சி வி சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், பா வளர்மதி, ஆர் பி உதயக்குமார், வைகை செல்வன், செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் இன்று இறுதி செய்யப்படும் என்று வைகை செல்வன் தெரிவித்தார்.