உயிரிழந்த காதலனின் பெற்றோருக்கு மகளாக பணிவிடை செய்யும் காதலி...! உள்ளத்தில் கலந்த காதல் சோகம்
Published : Jun 03, 2022 2:21 PM
உயிரிழந்த காதலனின் பெற்றோருக்கு மகளாக பணிவிடை செய்யும் காதலி...! உள்ளத்தில் கலந்த காதல் சோகம்
Jun 03, 2022 2:21 PM
நாகை அருகே திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு காதலன் உயிரிழந்த நிலையில் 10 ஆண்டுகளாக காதலித்த பெண் காதலனின் நினைவாக காதலனின் வீட்டிலேயே தங்கி அவரது வயதான தாய் தந்தைக்கு மருமகளாக இருந்து பணிவிடை செய்து வருகின்றார்
நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள பிராபராமபுரம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் - பத்மாவதி தமதியினரின் மகன் சபரிகிருஷ்ணன். 26 வயதான இவர் வேளாங்கண்ணி மின்வாரிய அலுவலகத்தில் கேங் மேனாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் பகுதியை சேர்ந்த ஜெயா - மோஹன் தம்பதியினரின் மகள் ரேவதியும், சபரி கிருஷ்ணனும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 20ந்தேதி அன்று திருமண நாள் குறித்து, அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் இருவீட்டாரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
10 ஆண்டுகள் காதலித்த இருவரும் ஒன்று சேர 15 நாட்களே இருந்த நிலையில், வேளாங்கண்ணியில் மின் கம்பிகளில் உரசும் மரக்கிளைகளை அகற்றும்போது சபரி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அதீத மன உளைச்சலுக்கு ஆளான ரேவதி, காதலனின் மரணத்தை தாங்க முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார். பின்னர் காதல் கணவரின் இழப்பை நினைத்து வாடிய அவர், மகனை இழந்து வாடும் தனது கணவரின் வயதான, தாய் தந்தையின் நிலைமையை நினைத்து கவலையுற்று அவர்களோடு வாழ முடிவெடுத்துள்ளார்.
இதனால் தனது வீட்டில் இருந்து வந்த ரேவதி, காதல் கணவரின் நினைவாக அவரது வீட்டில் தங்கி தனது வயதான மாமியார் மாமனாருக்கு பணிவடைகள் செய்து வாழ்ந்து வருகிறார்.
மருமகள் தங்கள் வீட்டில் வாழ்வதால் மகனின் நினைவாக நாங்கள் எங்கள் மருகமகளை பார்த்து வருவதாக கண்ணீர் மல்க கூறுகிறார் தாய் பத்மாவதி.
வேளாங்கண்ணி பேராலயத்தில் காவலாளியாக வேலை பார்த்து சிரமப்பட்டு வரும் சபரி கிருஷ்ணனின் தந்தை கோவிந்தராஜ், கூலி வேலைக்கு செல்லும் அவருடைய சகோதரர் என ஒட்டுமொத்த குடும்பமும் அரசு வேலையில் இருந்த சபரி கிருஷ்ணனின் வருவாயை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்துள்ளனர்.
ரேவதி மெடிக்கல் ஒன்றில் வேலைப்பார்த்து அந்த குடும்பத்திற்கு உதவியாக இருந்து வருகின்றார். வாழவேண்டிய வயதில் இளம் பெண் ஒருவர் தன் தம்பி மீது கொண்ட காதலால் ,தனது வீட்டில் தங்கி தனது குடும்பத்திற்க்காக உழைத்து, அவளது வாழ்க்கையை வாழாமல் துறவி போல இருக்கிறாரே என்ற சிறு வருத்தமோ, அனுதாபமோ , இல்லாத சபரீசனின் அண்ணனோ, தனது தம்பி இறந்த பின்னர் வழங்குவதாக கூறிய 3 லட்சம் ரூபாய் இழப்பீடும் வாரிசு வேலையும் தங்கள் குடும்பத்துக்கு இது வரை கிடைக்கவில்லை என்கிறார்
இறந்த உடன் பிறப்பை மறந்து பணத்தை மட்டுமே நேசிக்கும் மனிதர்கள் மத்தியில், உடல் கடந்து உள்ளத்தில் கலந்த தனது காதலனுக்காக அந்த உணர்வோடு வாழக்கற்றுக் கொண்ட ரேவதியை அவரது உறவினர்கள் வியப்போடு பார்க்கின்றனர்...!