அரசு திட்டங்களின் பயன்கள் நூறு சதவிகிதம் மக்களை சென்றடைய வேண்டும் என்பதே மத்திய அரசின் லட்சியம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் அட்கோட்டில் மாதுஸ்ரீ கேடிபி மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அரசின் முயற்சியோடு மக்களின் முயற்சி இணையும் போது, சேவையாற்றுவதற்கான பலம் அதிகரிக்கும் என்றார். இதற்கு இந்த மருத்துவமனை மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் 3 கோடி பேருக்கு தரமான வீடுகள், 9 கோடி மகளிருக்கு எரிவாயு இணைப்பு, 2.5 கோடி பேருக்கு மின்வசதி பல சாதனைகள் மத்திய அரசு படைத்துள்ளது என்ற அவர், இவை வெறும் புள்ளிவிபரங்கள் அல்ல, ஏழைகளின் நலன் காத்த தற்கான சான்றுகள் என்றார்.
மகாத்மா காந்தி,சர்தார் பட்டேல் ஆகியோர் கனவுகளை நனவாக்கும் வித த்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டை கட்டமைக்க நேர்மையான வழியில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
ஏழைகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கியதோடு,மருத்துவ வசதியும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஏழைகளுக்கான மருத்துவ பரிசோதனை, சிகிச்சை வசதிகளை எளிமைப்படுத்தி உள்ளதாக அவர் கூறினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா காலத்தில் மக்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், பயனாளர்களின் வங்கி கணக்குகளுக்கே பணம் அனுப்பப்படுகிறது என்றார்.