முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் புதிய கட்சியை துவக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் செய்தியாளர்களிடம் இதை தெரிவித்த அவர், தமது ஆதரவாளர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விரைவில் சந்தித்து, தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து பேசப் போவதாக தெரிவித்தார்.
புதிய கட்சியின் பெயரை இப்போது வெளியிட முடியாது என்ற அவர், தனிச்சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் கூறினார்.
புதிய கட்சி ஆரம்பிக்க முடிவெடுத்த பின்னரும் தொடர்ந்து காங்கிரசில் நீடிப்பது ஏன்? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு தாம் 52 ஆண்டுகளாக காங்கிரசில் இருப்பதாவும், மேலும் 10 நாட்கள் அதில் தொடர்ந்தால் என்ன ஆகி விடும் எனவும் அவர் பதிலளித்தார்.