சாதிய நாடகம் கிராம உதவியாளருக்கு எதிராக திரண்ட விவசாயிகள்..!
Published : Aug 17, 2021 2:51 PM
சாதிய நாடகம் கிராம உதவியாளருக்கு எதிராக திரண்ட விவசாயிகள்..!
Aug 17, 2021 2:51 PM
கோவையில் விவசாயியை தாக்கிவிட்டு சாதியை வைத்து பிரச்சனையை திசை திருப்பிய கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் குதித்ததால், அந்த கிராம உதவியாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தில் பட்டா மாறுதல் முறைகேடு குறித்து கேள்வி கேட்ட விவசாயி கோபால் சாமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி, விவசாயியை தாக்கிய கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். முன்னதாக முத்துசாமி காலில் விழுந்து நாடகமாடி சாதிய கொடுமை நடந்ததாக அளித்த பொய்புகார் மீது அன்னூர் போலீசார் விவசாயி கோபால்சாமி மீது சாதிய வன்கொடுமை மற்றும் அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததாக இரு வழக்குகள் பதிவு செய்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட கோபால்சாமி மீது பொய்வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும் அவர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கத்தினர் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்
இதில் தமிழக விவசாயிகள் சங்கம் கட்சி சார்பற்ற விவசாய சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கத்தினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின்போது பொய் வழக்கை ரத்து செய்யக் கோரியும் சாதி மோதல்களை ஏற்படுத்தும் வகையில் தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட முத்துச்சாமி மீதும் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் வீடியோ எடுத்த நபர் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதுகுறித்து பேசிய விவசாய சங்கத்தினர், முத்துசாமி மற்றும் விஏஓவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தது போதாது என்றும் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் மேலும் இருவரையும் நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர், மேலும் காவல்துறையினர் விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட வழக்கை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் அன்னூரில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்தனர்.
இதற்கிடையே விவசாயியை தாக்கி விட்டு , காலில் கும்பிட்டு விழுந்து சாதியை வைத்து நாடகம் போட்ட கிராம உதவியாளர் முத்துச்சாமி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.