தமிழகத்தில் ஏழைகளே இல்லை என்பதை லட்சியமாகக் கொண்டு, அதிமுக அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் வேளச்சேரி, கீழ்கட்டளை, கந்தன்சாவடி, கேம்ப்ரோடு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
மாதவரத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அவர், தமிழகத்தில் செயல்பட்டு வரும் குடிமராமத்து பணிகள் இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். இந்தப் பணிகள் மூலம் 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் ஆயிரத்து 300 கோடி ரூபாயில் தூர்வாரப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9 ஆயிரத்து 300 கோடி ரூபாய் இழப்பீடாக பெற்றுத் தந்துள்ளதாகவும், மழை, வெள்ளம், புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தொழில் முதலீட்டாளர் மாநாடு மூலம் 3 லட்சத்து 500 கோடி முதலீட்டில் 304 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வீடு, நிலம் இல்லாத ஏழைகளுக்கு காங்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று உறுதியளித்த முதல்வர், தமிழகத்தில் ஏழை என்ற ஜாதியே இருக்கக் கூடாது என்பதே லட்சியம் என்றும் குறிப்பிட்டார்.