சென்னை மாநகர மக்கள் சுபிக்சமாக வாழ விரிவாக திட்ட அறிக்கை தயார் செய்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், மாதவரம் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், செல்லும் இடத்தில் எல்லாம் கொண்டு வந்த திட்டங்களை சொல்லி வாக்கு கேட்பதாகவும், ஆனால், திமுகவினர் செல்லும் இடம் எல்லாம் பழி சொல்லி, குற்றச்சாட்டுகளை சொல்லி வாக்கு கேட்கின்றனர் என்றார்.
சமீபத்தில் பெய்த மழையால் வேளச்சேரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். பாதாள சாக்கடை திட்டம் நிறைவு பெற்றுள்ளதாகவும், சென்னை மாநகர மக்கள் சுபிக்ஷமாக வாழ விரிவாக திட்ட அறிக்கை தயார் செய்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்ட, எடப்பாடி பழனிசாமி, 308 சாலை பணிகள், 247 சிமெண்ட் கான்கிரீட் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்றும், 173 பூங்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார்.