​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மானத்தை காப்பாற்றுகின்ற தேர்தல்-மு.க.ஸ்டாலின்

Published : Mar 30, 2021 6:13 PM

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மானத்தை காப்பாற்றுகின்ற தேர்தல்-மு.க.ஸ்டாலின்

Mar 30, 2021 6:13 PM

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கானது மட்டுமல்ல, மானத்தை மரியாதையை காப்பாற்றுகின்ற தேர்தல் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி,நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரசாரத்தின் போது பேசிய அவர், தேர்தல் காலத்தில் மட்டுமே மக்களை நாடி வரும் இயக்கம் திமுக அல்ல என்றார்.

எந்த சூழலிலும் மக்களின் சுய துக்கங்களில் பங்கேற்கும் இயக்கம் என்ற உரிமையோடு மக்களை நாடி வந்துள்ளதாக அவர் கூறினார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின்  மீனவர்கள் உரிமையை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்படுமென அவர் வாக்குறுதி அளித்தார். மீனவ சமுதாயத்தினரை கடல்சார் பழங்குடியின மக்கள் என்று பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு தி.மு.க. ஆட்சி நிச்சயம் முயற்சி செய்யும் என்று அவர் கூறினார். 

இப்போது கொரோனா இரண்டாவது அலை வந்துவிட்டதாக கூறிய ஸ்டாலின், மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டுமென வலியுறுத்தினார்.

உரிமையைக் காப்பதற்கு உதய சூரியன்  என்ற அவர் உயிரைக் காப்பதற்கு முகக் கவசம் என்றார்.

தேர்தல் பிரசாரத்தின் போது அவர் கன்னியாகுமரி வேட்பாளர் அகஸ்டின், நாகர்கோவில் தொகுதி வேட்பாளர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் விஜய் வசந்த் ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார்.

இதே போன்று ஆலங்குளம் தொகுதி வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா,சங்கரன்கோவில் வேட்பாளர் ராஜா,வாசுதேவநல்லூர் வேட்பாளர் சதன் திருமலைக்குமார், தென்காசி வேட்பாளர் எஸ்.பழனி நாடார், கடையநல்லூர் வேட்பாளர் முகமது அபுபக்கர் ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.

ராஜபாளையம் வேட்பாளர் தங்கப்பாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர் மாதவ ராவ், சாத்தூர் வேட்பாளர் ரகுராமன், அருப்புக்கோட்டை வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், சிவகாசி வேட்பாளர் அசோகன், விருதுநகர் வேட்பாளர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், திருச்சுழி வேட்பாளர் தங்கம் தென்னரசு ஆகியோருக்காக பிரசாரம் செய்தார்.