​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிமுகவுடன் மோதினால் மண்டை உடையும் : மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை

Published : Jan 21, 2021 12:12 PM

அதிமுகவுடன் மோதினால் மண்டை உடையும் : மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை

Jan 21, 2021 12:12 PM

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வதெல்லாம் பொய் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். எஃகு கோட்டையான அதிமுகவுடன் மோதினால் மண்டை உடையும் என்றும், வீண் பழி சுமத்தினால் வெளியில் நடமாட முடியாது என்றும் மு.க.ஸ்டாலினை அவர் எச்சரித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசிய முதலமைச்சர், அக்கட்சி ஆட்சியில் இல்லாதபோதே காவல்துறை அதிகாரிகளை உதயநிதி ஸ்டாலின் மிரட்டுவதாகக் குற்றம்சாட்டினார்.

அமைதிபூங்காவாக உள்ள தமிழகம், திமுக வெற்றிபெற்றால் ரவுடி ஆட்சியாக மாறிவிடும் என விமர்சித்தார்.

அதிமுகவுடன் மோதினால் மண்டைதான் உடையும் என்றும், வீண் பழி சுமத்தினால் வெளியில் நடமாட முடியாது என்றும் மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே, செய்யூர் தொகுதிக்குட்பட்ட புதுப்பட்டினம் மீனவர் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஏழை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் காங்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அப்போது அறிவித்தார். கிராமப்புறங்கள் ஆனாலும், நகர் பகுதிகள் ஆனாலும் ஏழைத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தருவதே அரசின் லட்சியம் என்றார்.