கன்னியாஸ்திரி அபயா கொலை!- 28 ஆண்டுகளுக்கு பிறகு பாதிரியார் குற்றவாளி என தீர்ப்பு

0 43111
குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட பாதிரியார் , கன்னியாஸ்திரி செபி

கேரளாவில் கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என்று திருவனந்தபுரம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா அங்குள்ள பி.எம்.சி கல்லூரியில் படித்து வந்தார். தன் படிப்புக்காக செயின் பயஸ் கான்வென்ட்டில் தங்கியிருந்தார். கடந்த 1992-ம் ஆண்டு மார்ச் 27- ஆம் ஆண்டு இந்த கான்வென்ட் வளாகத்திலுள்ள கிணறு ஒன்றில் அபயா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அப்போது அபயாவுக்கு 19 வயதே ஆகியிருந்தது . முதலில் அபயா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. கோட்டயம் போலீஸார் வழக்கு பதிவு விசாரித்து வந்தனர்.

image

ஆனால், அபயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மனித உரிமை ஆர்வலர் ஜோமோன் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த சி.பி.ஐ குழு நடத்திய விசாரணையில்தான் அபயா கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கொலையாளிகளை தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் சி.பி.ஐ குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தொடர்ந்து, அடுத்ததாக ஒரு சி.பி.ஐ குழு அமைக்கப்பட்டது. இந்த குழுதான் அபயாவை பாதிரியார்கள் தாமஸ் கோட்டூர், ஜோஸ் புத்ருக்கயில் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததை கண்டுபிடித்தது.


பாதிரியார்களுக்கும் கன்னியாஸ்திரி செபிக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதை ஒரு முறை கன்னியாஸ்திரி அபயா நேரில் பார்த்து விட்டார். தங்களின் தகாத உறவை அபயா வெளியே கூறி விடுவார் என்று பயந்து போன பாதிரியார்கள், கன்னியாஸ்திரி அபாயவை கான்வென்ட் வளாகத்தில் உள்ள கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளனர். 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கேரள உயர்நீதிமன்றத்தை அணுக , பாதிரியார் ஜோஸ் புத்ருக்கயில் மட்டும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். மற்ற இருவர் மீதும் வழக்கு நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக இந்த வழக்கில் 177 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. பல்வேறு திருப்பங்களுடன் நடைபெற்ற இந்த வழக்கில் பல சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறினர்.சிலர் தங்கள் சாட்சியத்தில் உறுதியாக நின்றனர்.

அபயாவின் ஆசிரியையான தெரசம்மா என்பவர் பல மிரட்டல்களை மீறி சி.பி.ஐ நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார். தெரசம்மாஅளித்த சாட்சியத்தில் இரண்டு பாதிரியார்களும் பல கன்னியாஸ்திரிகளிடத்தில் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததாக நீதிமன்றத்தில் கூறினார். அக்கம் பக்கத்தினர் அளித்த சாட்சியத்தில், இரண்டு பாதிரியார்களும் சுவர் ஏறி குதித்து கன்னியாஸ்திரிகள் வசிக்கும் பகுதிக்கு சென்றதை பார்த்துள்ளதாக தெரிவித்தனர். அதே போல இந்த வழக்கில் ஆலப்புழா அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு தலைவர் லலிதாம்பா மற்றும் டாக்டர் பிரேமா ஆகியோர் அளித்த கன்னியாஸ்திரி செபியின் கன்னித்தன்மை பரிசோதனை குறித்த சாட்சியும் முக்கியத்துவம் பெற்றது.  தன்னை கன்னித்தன்மையுடன் இருப்பது போல காட்டிக் கொள்வதற்காக  செபி அறுவை சிகிச்சை செய்திருந்ததை கண்டுபிடித்ததாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

அலக்கா ராஜூ என்ற திருடனும் கொலை நடந்த தினத்தின் போது, அதிகாலையில் கொன்வென்டுக்குள் திருட சென்றுள்ளான். அலக்கா ராஜுவும் இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தான். தான் திருட சென்ற சமயத்தில் பாதிரியார்கள் மற்றும் ஒரு கன்னியாஸ்திரியுடன் அந்த வளாகத்துக்குள் சுற்றி வந்ததை பார்த்ததாக சி.பி.ஐ நீதிமன்றத்தில் சாட்சியளித்தான். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்றது.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சனில் குமார், பாதிரியார் தாமஸ் கோட்டூர். கன்னியாஸ்திரி செபி ஆக்யோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும். தீர்ப்பை கேட்டதும் பாதிரியாரும் கன்னியாஸ்திரியும் கதறி அழுதனர். தற்போது இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments