Polimer News
Big Story அரசியல் வீடியோ

காங்கிரசுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் ஒரு விரல் புரட்சி..!

கன்னியாகுமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமாரை ஆதரித்து பிரச்சாரத்தில் இறங்கி உள்ள நிலையில், நடிகர் விஜய் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றார்.

சர்க்கார் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் அவ்வப்போது சத்தமே இல்லாமல் அரசியல் செய்வது நடிகர் விஜய்யின் பாலிசி..!

கடந்த 2011 தேர்தலின் போது அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக தனது ரசிகர்களை வேலை செய்ய ஆணையிட்ட விஜய், வெற்றிக்கு பின்னர் அதிமுக ஆட்சி அமைக்க தானும் ஒரு அணில் போல இருந்து உதவியதாக நடிகர் விஜய் பெருமை தெரிவித்தார்..! அதன் பின்னர் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவான நிலைப்பாடு எடுக்காமல் அரசியலை விட்டு விலகியே இருந்தார்..!

இந்த நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் சபின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள், காங்கிரஸ் வேட்பாளர் எச். வசந்தகுமாரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு பொன்னாடை போர்த்திய விஜய் ரசிகர்கள், நடிகர் விஜய்யையும், வேட்பாளர் வசந்தகுமாரையும் வாழ்த்தி கோஷம் போட்டனர்

ஆனால் இது குறித்து ஆதரவாகவோ, எதிர்த்தோ எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் நடிகர் விஜய் மவுனம் காத்து வருகின்றார். அதே நேரத்தில் விஜய் ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பிடித்த அரசியல் கட்சிகளில் வேலை செய்யலாம் என்றும் மன்றத்தின் பெயரையோ, கொடியையோ, விஜய்யின் பெயரையோ பயன்படுத்த கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த விஜய் மக்கள் இயக்க மாநில நிர்வாகிகள், கன்னியாகுமரி ரசிகர்களின் செயல்பாடு குறித்து விஜய்யின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் , தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விஜய் விரைவில் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே களியக்காவிளையில் ‘குமரி மேற்கு மாவட்ட தலைமை விஜய் நற்பணி மன்றத் தலைவர்’ என்று கூறி ஜோஸ்பிரபு என்பவர் செய்தியாளர்களை சந்தித்தார். சான்றிதழ் ஒன்றைக் காட்டிய அவர், வசந்தகுமாரை சந்தித்து ஆதரவு கொடுத்த சபின் மாவட்டச் செயலாளரோ, தலைவரோ கிடையாது என்றும் அவர் பணம் வாங்கிக்கொண்டு ஆதரவு தெரிவித்திருப்பதாக தங்களுக்கு தகவல் வருகிறது என்றும் கூறினார்.

சபினோடு சென்று காங்கிரஸ் வேட்பாளரை சந்தித்த அத்தனை பேரும் விஜய் ரசிகர்கள் கிடையாது என்றும் அவர்களில் பாதி பேர் வெளியில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் என்றும் ஜோஸ்பிரபு கூறினார். இறுதியாக தாங்கள் அனைவரும் நோட்டாவுக்கு வாக்களிக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே மற்றொரு விஜய் ரசிகர் குழு, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்து பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Polimer News