இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, வரும் 7-ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறர்.
இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ச கடந்த ஆண்டு நவம்பரில் பொறுப்பேற்றார். அதன் பின்னர் அவரது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்சவின் பயணம் குறித்து இலங்கை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் ராஜபக்ச இந்தியாவில் வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தச் சுற்றுப்பயணத்தின் போது அவர் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரைச் சந்தித்துப் பேச உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது, அரசியல், வர்த்தகம், பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் மேம்பாடு குறித்தும் குறிப்பாக கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான ஆலோசனைகள் நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.