சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் பரவியிருப்பதாக சீன அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் கடந்த வாரம் அதிவேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இதன் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சீனாவில் மட்டும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. வைரஸ் தாக்குதல் வேகமாக இருப்பதால் சீல் வைக்கப்பட்ட வூகான் மற்றும் ஹூபே பகுதிகள் வசிக்கும் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்சில் ஒருவரும் ஹாங்காங்கில் ஒருவரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 65 பேர் இறந்திருப்பதாகவும், 3 ஆயிரத்து 156 பேருக்கு நோய் பரவியிருப்பதாகவும் சீன அரசு அறிவித்துள்ளது.
சீனாவுக்கு வெளியே இதுவரை 176 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், சில குறிப்பிட்ட நாடுகள் தங்கள் நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மறைப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஹாங்காங்கில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து விடுமுறையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் உள்ள சர்வதேச வாகன உற்பத்தி நிறுவனங்களான ஹூண்டாய், டெஸ்லா, ஃபோர்டு, நிஸான் உள்ளிட்டவைகள் தங்களின் உற்பத்தியை நிறுத்த உத்தேசித்துள்ளன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா உதவிகளை வழங்குவதற்கு பதிலாக உலக நாடுகளிடம் வைரஸ் குறித்து அச்சத்தை உருவாக்கி அதனை பரப்பி வருகிறது என சீன வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்துப் போராட அமெரிக்காவின் உதவியை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்களில் ஒருவருக்கொருவர் செய்யும் உதவிகளையும் சீனர்கள் மறுத்து வருகின்றனர்.
புதிதாக தங்கள் ஊருக்குள் வருபவர்களை அச்சத்துடன் பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், விடுதிகளில் அனைத்து அடையாள அட்டையைக் காட்டினாலும் அறை கொடுக்க மறுப்பதாகவும் சீன மாணவர்கள் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.