2019-ல் டிக்டாக்கில் இந்தியர்கள் செலவிட்டுள்ள நேரம் எவ்வளவு தெரியுமா.?
Published : Feb 04, 2020 5:23 PM
2019-ல் டிக்டாக்கில் இந்தியர்கள் செலவிட்டுள்ள நேரம் எவ்வளவு தெரியுமா.?
Feb 04, 2020 5:23 PM
டிக்டாக்கில் எப்படியாவது ஜொலிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் பாராமல் எல்லோரிடமும் இருக்கிறது. இந்நிலையில் 2019-ம் ஆண்டு டிக்டாக்கில் இந்தியர்கள் செலவிட்டுள்ள நேரம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரே இலக்கு:
சரியான மேடை கிடைக்காமல் மறைக்கப்பட்ட தனித்திறமைகள் மற்றும் குழு திறமைகளை வெளிக்காட்ட பலரும் டிக் டாக்கை பயன்படுத்தி வருகின்றனர். நடிப்பு மற்றும் இன்னபிற திறமைகளை வீ டியோக்களாக பதிவு செய்து, அதை டிக் டாக்கில் பதிவிடுகின்றனர். பதிவிடும் வீடியோக்களுக்கு லைக்குகள், ஃபாலோயர்களை குவிக்க வேண்டும் என்பதை ஒரே இலக்காக கொண்டு செயல்படும் பட்டாளமே எப்போதும் டிக்டாக்கும், கையுமாக சுற்றுகிறது.
கேள்விக்குறியாகும் புகழ்:
திறமைகளை வெளிக்காட்டி நல்வழியில் பிரபலமாகும் பலரும் உள்ள டிக்டாக்கில், சிலர் எதிர்மறையான திறமைகளை வெளிப்படுத்தி ஆபாசமாக செயல்பட்டு அடிப்படை நடத்தை விதிகளை மீறும்போது அவர்களின் புகழ் கேள்விக்குறியாகிறது.
சமீபத்திய அறிக்கை:
இந்நிலையில் App Annie என்ற தரவு பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018-ம் ஆண்டை விட 2019-ம் ஆண்டில் இந்தியர்கள் மிக அதிக நேரம் டிக்டாக்கில் செலவிட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் பேஸ்புக்கை காட்டிலும், டிக்டாக்கின் மாதாந்திர செயல்படும் பயனர்களின் ( Active Users ) எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்தியர்கள் வெறித்தனம்:
இந்நிலையில் டிக்டாக்கின் மீது இந்தியர்கள் வெறித்தனமாக உள்ளார்கள் என்று சொன்னால் மிகையாகாது. ஏனென்றால் 2019-ம் ஆண்டில் மட்டும் இந்தியர்கள் டிக்டாக்கில் வீடியோக்களை பதிவிட சுமார் 5.5 பில்லியன் மணி நேரங்களை வெறித்தனமாக செலவிட்டுள்ளனர். ஆண்டு கணக்கில் இது தோராயமாக 6 லட்சத்து 27 ஆயிரம் ஆண்டுகள். அதுவே நூற்றாண்டை கணக்கிட்டால் சுமார் ஆறாயிரம் நூற்றாண்டுகள்.
2018-ம் ஆண்டில் 900 மில்லியன் மணிநேரங்களை செலவிட்ட இந்தியர்கள் அதை விட விட ஆறு மடங்கு நேரத்தை 2019ம் ஆண்டில் செலவிட்டுள்ளனர். இதே போக்கு நீடித்தால் 2020-ம் ஆண்டில் டிக்டாக் பயன்பாட்டில் இந்தியா புதிய சாதனைகளை நிகழ்த்திவிடும் வாய்ப்புள்ளது.
ஃபேஸ்புக்கை முந்தும் டிக்டாக்:
சீனாவிற்கு அடுத்தபடியாக டிக்டாக்கை அதிகம் பயன்படுத்துபவர்கள் இந்தியர்களாக உள்ளனர். ஃபேஸ்புக்கை ஒப்பிடும்போது டிக்டாக்கில் பயன்பாட்டாளர்கள் செலவிட்ட நேரம் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் டிக்டாக் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் ஃபேஸ்புக் 2006-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. 2019-ல் இந்தியாவில் iOS மற்றும் Android சாதனங்களில் டிக்டாக் சுமார் 323 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக் 156 மில்லியன் முறை பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளது .
இந்த புள்ளிவிவரங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது, மற்ற எந்த சமூக ஊடக தளத்தை விட, மக்கள் டிக்டாக்கை மிக தீவிரமாக பயன்படுத்துவதை உணர முடிகிறது என App Annie நிறுவனம் கூறியுள்ளது.