தாய்லாந்து நோக்கிப் பறந்து கொண்டிருந்த விமானத்தில், நடுவானில், பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்ததால், அந்த விமானம் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது.
கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு,கத்தார் ஏர்வேஸ் விமானம், 352 பயணிகளுடன் நேற்றிரவு புறப்பட்டுச் சென்றது. இன்று அதிகாலை, இந்திய வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
விமானப் பணிப்பெண்கள் உதவியுடன், அதிகாலை 3 மணியளவில், அந்த பெண், அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். விமானி அவசர மருத்துவ உதவி கோரியதைத் தொடர்ந்து, அதிகாலை 3.10 மணியளவில், அந்த விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. தாயும், சேயும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கத்தார் ஏர்வேஸ் விமானம், அதிகாலை 5.50 மணிக்கு தாய்லாந்தை நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தது.