தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஒருநபர் விசாரணை ஆணையம், நடிகர் ரஜினிகாந்த்துக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதுகுறித்து விசாரிக்க தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம், ஏற்கனவே 18 கட்ட விசாரணைகளை முடித்துள்ளது.
இந்நிலையில் 19ம் கட்ட விசாரணையை துவங்க உள்ள ஆணையம், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சமயத்தில் அதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு, வரும் 25ம் தேதி நேரில் அஜராகி விளக்கம் அளிக்கும் படி சம்மன் அனுப்பி உள்ளது.