கொரோனா: சென்னை வந்த 7,000க்கும் மேற்பட்ட விமான பயணிகளுக்கு பரிசோதனை
Published : Feb 04, 2020 1:02 PM
சீனா மற்றும் அதன் அண்டை நாடுகள் உட்பட வெளிநாடுகளில் இருந்து, சென்னை வந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகளிடம் நடைபெற்ற சோதனையில், அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இல்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டிருக்கிறது.
சீனாவிலிருந்தும், அதன் அண்டை நாடுகளிலிருந்தும் வருவோர், பொது சுகாதாரத் திட்டத்தின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவரவர் வீடுகளிலேயே, 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கும் நடவடிக்கை, இடைநிற்றலின்றி பின்பற்றப்படுவதாகவும், தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு, சீனா மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை உட்பட தமிழ்நாட்டிற்கு வந்துள்ள ஆயிரத்து 150 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, பிரத்யேக மருத்துவக் குழுக்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.