KVB வங்கியின் MD & CEO பதவியிலிருந்து பி.ஆர்.சேஷாத்ரி விலகல்
Published : Jan 06, 2020 3:08 PM
KVB என அழைக்கப்படும் கரூர் வைஸ்யா வங்கியின் மேலாண் இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பி.ஆர்.சேஷாத்ரி (P R Sheshadri) பதவி விலகியுள்ளார்.
இதையடுத்து, அந்த வங்கியின் பங்குகள் இன்று, சுமார் 5 விழுக்காடு அளவிற்கு சரிவை எதிர்கொண்டிருக்கின்றன. கரூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், நூற்றாண்டை கடந்த KVB வங்கியில், கடந்த 2017ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக, பி.ஆர்.சேஷாத்ரி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக, பதவியிலிருந்து விலகுவதாக, அண்மையில் கடிதம் அளித்தார். இவரது பதவி விலகல் கடிதத்தை, கேவிபி வங்கியின் இயக்குநர்கள் அடங்கிய நிர்வாக குழு ஏற்றுக்கொண்டுள்ளது. இருப்பினும், வருகிற மார்ச் வரையிலான நிகழ்நிதியாண்டின் இறுதிவரை, பி.ஆர்.சேஷாத்ரி பணியில் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.